முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அவருடன் சேர்ந்து 14 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்த தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இந்த வழக்கில் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படும் பேரறிவாளன் தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ராஜிவ் காந்தி பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கிக் கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்கு கொடுக்க அனுமதி வழங்கியதோடு, இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த ஒராண்டாக சரியாக விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று (நவம்பர் 5ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா அமர்வு, இதுதொடர்பாக நான்கு வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கை விசாரணை பட்டியில் இருந்து நீக்கப்படக் கூடாது என வழக்கறிஞர் பிரபு, நீதிபதி ரமணா அமர்வில் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10ஆவது நாளை எட்டிய நளினியின் பட்டினிப் போராட்டம்!