ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் பிரசித்திப்பெற்ற ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக கரோனா பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஒடிசா விகாஷ் பரிசத் என்ற அமைப்பு ரத யாத்திரை நடத்த தடை கோரி மனு தாக்கல்செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே அமர்வு, கரோனா சூழலில் 10 ஆயிரம் பேர் கூடுவதே மிகவும் ஆபத்தானது. இதனால் இந்த ரத யாத்திரையை நிச்சயமாக அனுமதிக்க முடியாது எனத் தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மேல் முறையீட்டு மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரத யாத்திரையை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளனர்.
ஆலய நிர்வாகக் குழு, மத்திய மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து சுகாதாரச் சிக்கல் எதுவும் ஏற்படாததை உறுதிசெய்தபின் இந்த ரத யாத்திரையை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் என்ற நிலை ஏற்பட்டால் இந்த ரத யாத்திரையை அரசு ரத்துசெய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: "சீனப் பொருள்களை புறக்கணிப்பதால் இந்தியாவுக்கே அதிகம் பாதிப்பு"