விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையா, “மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ), அமலாக்கத் துறையினர் என்னிடம் முற்றிலும் நியாயமற்ற முறையில் நடந்துகொண்டனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களின் நடவடிக்கை நியாயமற்றது. நான் எனது கடனை முழுவதுமாகச் செலுத்திவிடுகிறேன். எனது சொத்துகளை ஒருபக்கம் கடன் கொடுத்த வங்கிகளும், மறுபக்கம் அமலாக்கத் துறையினரும் பிடித்து இழுக்கின்றனர்.
நான் அமலாக்கத் துறையிடம் எவ்வித கடனையும் வாங்கவில்லை. உண்மையில், வங்கிகளிடமிருந்தும் நான் கடன் பெறவில்லை. எனது நன்மதிப்பின் அடிப்படையில் கிங் பிஷர் நிறுவனத்துக்கு வங்கிக்கடன் கிடைத்தது. ஆனாலும் அந்தக் கடனை திருப்பிச் செலுத்த நான் தயாராக உள்ளேன்” என்றார்.
இந்நிலையில், சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையாவை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவித்து, அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதின்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கைத் தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தது. ஹோலி பண்டிகை விடுமுறைக்குப் பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: கழிவு நீரோடு யமுனை...! மஞ்சள் நிறமான தாஜ்மஹால்...! விழிபிதுங்கும் உத்தரப் பிரதேச அரசு...!