மத்திய பிரதேச மாநிலத்தின் அலாம்பூர் பகுதி பாரத ஸ்டேட் வங்கியின் கிளை அமைந்துள்ளது. இங்கு ஹூக்கும் சிங் என்று ஒரே பெயரைக்கொண்ட இரண்டு பேர் தங்களுக்கான வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் ரூரை என்ற கிராமத்தையும், மற்றொருவர் ரௌனி என்ற கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.
இந்த சூழலில் ரூரை கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த அதே வங்கி கணக்கிலிருந்து ரௌனியைச் சேர்ந்த ஹூக்கும் சிங் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், ரூரையைச் சேர்ந்த ஹூக்கும் சிங் தனது வங்கிக் கணக்கை பார்த்தபோது, தான் வங்கிக் கணக்கில் செலுத்திய பணத்தில் பெருமளவு எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வங்கி அலுவலர்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது ஒரே பெயரைக் கொண்ட இருவருக்கும் ஒரே வங்கிக் கணக்கு எண் தவறுதலாக கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து ரௌனி கிராமத்தைச் சேர்ந்த ஹூக்கும் சிங் கூறுகையில், “எனது வங்கிக் கணக்கில் பிரதமர் மோடி பணம் செலுத்துகிறார் என நினைத்து பணத்தை எடுத்து செலவு செய்தேன். இது வங்கி அலுவலர்களின் தவறே ஒழிய எனது தவறு இல்லை” என்றார்.