காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைபாட்டை மாலத்தீவு ஆதரிக்கும், நாட்டின் உள்விவகாரம் என்பதால் அண்டை நாடுகள் கருத்து தெரிவிக்கக் கூடாது என மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.
மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மாவுக்கு அவர் அளித்த பேட்டியில், ”எங்கள் நாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், அதில் மற்ற நாடுகள் தலையிட நாங்கள் விரும்ப மாட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவருவது இந்திய ஜனநாயகம் துடிப்புடன் செயல்படுவதைக் காட்டுகிறது. காஷ்மீரில் ஆய்வு மேற்கொண்ட மாலத்தீவு தூதரக அலுவலர்கள், காஷ்மீர் விவகாரத்தை இந்திய அரசு சிறப்பாக கையாண்டதாக தெரிவித்தனர்” என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக நடத்தப்பட்ட ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்திருந்த ஷஹித், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, மாலத்தீவில் இந்தியா மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்தாலோசித்தனர். யாமீன் தலைமையிலான அரசு சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தகளை மறுபரிசீலனை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் உதவியால் மாலத்தீவில் கட்டப்பட்டுவரும் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டால் அதில், இந்தியாவை மாலத்தீவு வீழ்த்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் பேட்டி விவரம் பின்வருமாறு:
1. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் உடனான சந்திப்பில் ஆலோசிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் என்னென்ன?
பதில்: வளர்ச்சித் திட்டங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து விவாதித்தோம். இரு நாடுகள் சேர்ந்து நடத்திய மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த மாதம் டெல்லி வந்திருந்தேன். நாட்டு நிலவரங்களை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். நாட்டுக்குத் திரும்பியவுடன் இந்தியாவின் உதவியால் தெற்கு மாலத்தீவில் மேற்கொள்ளவுள்ள அட்டு அதோல் உள்ளிட்ட ஆறு வளர்ச்சி திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன்.
2. இந்தியாவிடமிருந்து எந்த விதமான திட்டங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: பெருந்தன்மையுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. அதிபர் சோலி டெல்லி வந்திருந்தபோது 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக வழங்குவோம் என இந்தியா வாக்குறுதி அளித்தது. இரு நாட்டு பண நோட்டுகளை மாற்றிக்கொள்ள மத்திய வங்கிகள் ஒப்புக்கொண்டன. அதைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தலைநகர் மேலிலிருந்து அடுத்துள்ள நகரப் பகுதிக்கு வழித்தடத்தை உருவாக்கும் பெரு மேல் இணைப்பு திட்டம் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவு வரும் வகையில் வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ளது. இதனால், மேல் சர்வதேச விமான நிலையத்தின் மீதான அழுத்தம் குறையும்.
3. இந்திய பெருங்கடல் பகுதியின் நிலைத்தன்மைக்காகவும் பயங்கரவாத ஒழிப்புக்காகவும் மாலத்தீவு அதிக கவனம் செலுத்திவருகிறது. இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டு மாலத்தீவு அதிர்ச்சியடைந்தது. இம்மாதிரியான விவகாரங்களை வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான கூட்டத்தில் விவாதிப்பீர்களா? பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்க போகிறீர்கள்?
பதில்: இந்தியாவின் நிலைத்தன்மை, பாதுகாப்பு என்பது அவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்கும் முக்கியம். இந்திய பெருங்கடலின் மத்தியில் அமைந்துள்ள மாலத்தீவுக்கு அது மிக முக்கியம். இந்தியாவில் நிலைத்தன்மை நிலவினால் எங்கள் நாட்டில் தாக்கத்தை உண்டாக்கும். எங்களின் பங்களிப்பு என்பது மாலத்தீவில் ஜனநாயக தன்மை தொடர்வதே ஆகும். அது, இந்தியாவின் பாதுகாப்பிற்கு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் இருநாடுகள் ஒன்றிணைந்து செயல்படமுடிகிறது.
4. இலங்கை குண்டுவெடிப்புக்குப் பிறகு ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரிதாக மாறியுள்ளது? கடந்த காலத்தில் மாலத்தீவைச் சேர்ந்த பலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளார்கள் அது குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்: ஐஎஸ் அமைப்பால் விடப்படும் அச்சுறுத்தல்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. நாம் விழிப்புடன் இருப்பது முக்கியம். பெரிய அளவிலான சுற்றலாத் துறை மாலத்தீவில் இயங்கிவருவதால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு இதில் தேவைப்படுகிறது. சுற்றுலாத் துறை சார்ந்த நிறுவனங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இலங்கை பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித வெடிகுண்டுகளாக மாறி தீங்கு விளைவிப்பவர்கள் விளிம்பு நிலையிலிருந்து வருவதில்லை.
அவர்கள் மெத்த படித்தவர்களாக உள்ளனர். இம்மாதிரியான பிரச்னைகள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, அதனைத் தீர்க்க இந்தியா, இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டுவருகின்றன. அனைத்து மட்டத்திலும் ஒத்துழைப்பு பேணப்படுவதே இதற்கான தீர்வாக இருக்கும். தனியாக செயல்பட்டால் இதில் வெற்றி காண முடியாது.
5. இந்தியாவின் தேடப்படும் நபராக இருக்கும் ஜாகிர் நாயக் கொடுத்த பயங்கரவாத பயிற்சியால் வங்கதேச பயங்கரவாதிகள் ஊக்கம் பெற்றுள்ளனர். ஆனால், அவருக்கு மலேசியா அடைக்கலம் தந்துள்ளது. மாலத்தீவு அவருக்கு அடைக்கலம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மலேசியாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
பதில்: யாரை நாட்டில் அனுமதிக்க வேண்டும் என்பதை மலேசியாதான் முடிவெடுக்கும். இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. மக்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கும் எவரையும் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். அது சட்டத்திற்கு எதிரானது.
6. இஸ்லாம் மதத்திற்கு அவர் கெட்ட பெயர் உருவாக்கி தருகிறாரா?
பதில்: இஸ்லாம் மதத்தின் பெயரில் வெறுப்புணர்வு பரப்புவது மதத்தை கொச்சைபடுத்துவதற்குச் சமம்.
7. அதிபர் சோலி, சபாநாயகர் நஷீத் ஆகியோருக்கிடையே மாற்றுக் கருத்து நிலவுகிறதா?
பதில்: இல்லை. ஆனால், பரந்துபட்ட ஆலோசனைக்குப் பிறகே பொறுப்புள்ள அரசு தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
8. குடியுரிமை திருத்தச் சட்டத்திலும் காஷ்மீர் விவகாரத்திலும் மாலத்தீவு இந்திய அரசை ஆதரித்துள்ளது. ஆனால், சிறுபான்மையினர் பாதிக்கப்படுவது குறித்து மாலத்தீவு யோசித்ததா?
பதில்: காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ஆதரித்த முதல் நாடு மாலத்தீவுதான். மக்களவையில் சட்டம் இயற்றப்பட்டபோது நான் டெல்லியில்தான் இருந்தேன். நாட்டின் அரசியலமைப்பின்படி ஜனநாயக தன்மையில் சட்டம் இயற்றப்பட்டதா என்பதை பொருத்துதான் எங்கள் நிலைபாடு உள்ளது. உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெறுவது வலுவான ஜனநாயக தன்மையை மேற்கொள் காட்டுகிறது. இதுபோன்ற உள்நாட்டு விவகாரங்களில் அண்டை நாடுகள் கருத்து கூறக் கூடாது.
மாலத்தீவு எவ்விதமான சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதை மற்ற நாடுகள் சொல்லக் கூடாது. ஜனநாயக தன்மை கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பதை மட்டும் உறுதிசெய்ய வேண்டும். சட்டத்தை திரும்ப பெற மக்கள் விரும்பினால், இந்திய அரசு அதனை மறு சீராய்வு செய்யும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதுதான் இந்தியா ஜனநாயகத்தின் வெற்றி.
9. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கும் உங்கள் நாட்டுக்கும் இம்மாதிரியான விவகாரங்களில் மாற்றுக் கருத்து நிலவுகிறதா?
பதில்: எங்கள் கருத்தை பொது வெளியில் தெரிவித்துள்ளோம்.
10. இந்தியாவின் உதவியால் கட்டப்படும் கிரிக்கெட் மைதானத்தின் நிலை என்ன?
பதில்: மைதானத்தை நான் பார்வையிட்டுள்ளேன். அழகாக உள்ளது. தயாராக உள்ளது. தொடக்க விழா விரைவில் நடைபெறும். பயற்சி தொடங்கியுள்ளது. எங்கள் நாட்டு இளைஞர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பயிற்சி அளிக்கின்றனர். விரைவில், இந்தியாவை வீழ்த்துவோம்.
11. அதிபர் சோலி போல் நீங்களும் கிரிக்கெட் ரசிகரா?
பதில்: அதிபர் சோலி கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகர். நானும் கிரிக்கெட் ரசிகன்தான். போட்டியைக் காண பெங்களூருக்கு வர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை நான் நன்றாக ரசித்தேன்.
இதையும் படிங்க: இந்திய - நேபாள உறவில் உருவாகியுள்ள புதிய சிக்கல்!’ - ஸ்மிதா சர்மா