சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை வழங்கியதையடுத்து, சசிகலா, ஜெ. இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விடுதலை செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த சில நாள்களாகவே, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நன்னடத்தைக் காரணமாக ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்யப்படுவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி பெங்களூரு சிறையிலிருந்து விடுதலை செய்யப்படவுள்ளார் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இவரது விடுதலை தொடர்பான செய்திகள் மீண்டும் அதிகளவு பேசப்பட்டன.
சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்?
அடுத்த 30 நாள்களில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் பட்டியலில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை காலம் இன்னும் முடிவடையவில்லை. நன்னடத்தைக் காரணமாக இவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பில்லை எனச் சிறை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், காவல் துறைத் தலைவர் அனுமதி அளித்தால், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள மூவரும் விடுதலை செய்யப்படலாம் எனத் தெரிவித்தனர்.