மகாத்மா காந்தியின் 72ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டுவரும் நிலையில், சர்வ தர்ம பிரார்த்தனை எனப்படும் மத நல்லிணக்கப் பிரார்த்தனை டெல்லி ராஜ்கோட்டிலுள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தவிர, ராஜ்கோட்டில் மாணவர் சங்கங்களும், இன்ன சில அமைப்புகளும் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்துள்ளன. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மனிதச் சங்கிலி போராட்டங்களைத் தொடங்கி, நடைபயணம் மேற்கொண்டு, ஷஹீன் பாக் மற்றும் கஜுரி காஸில் முடிக்கத் திட்டமிட்டுள்ளன.
ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ள இந்தப் பாதைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஜந்தர்மந்தர், ராம்லீலா உள்ளிட்ட வழக்கமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளுமாறும் மத்திய டெல்லியின் துணை காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக இடதுசாரி அமைப்புகளும் அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்து ராஜ்கோட்டில் மனிதச் சங்கிலி போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தன.
மேலும் கடந்த குடியரசு தினத்தன்று இதேபோல், குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. குறித்த ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறுத்திவைப்பு