புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையாக இந்திய விமானப் படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது. இதில் 300 பயங்கரவாதிகள் இறந்ததாக பாஜக தலைவர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருங்கியவரான சாம் பிட்ரோடா பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் இறந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக் குறித்து அவர் பேசுகையில், சர்வேதச ஊடகங்களில் பாலகோட் தாக்குதல் பற்றி வேறு விதமாகக் கூறப்படுகிறது எனவும், பாலகோட்டில் இந்திய விமானப் படை உண்மையாக தாக்கியதா என சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளதாகவும் கூறினார்.
பாலகோட் தாக்குதலில் சந்தேகம் எழுப்புவதால் தேசத்துக்கு எதிரானவனாக சித்திரிக்க வேண்டாம் எனவும், தேச மக்களுக்கு உண்மை தெரிவிப்பது அரசின் கடமை எனவும் கூறியுள்ளார். பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதே சரியான வழிமுறையாக இருக்கும் என தான் கருதுவதாகவும், பாகிஸ்தானில் இருக்கும் ஒரு சில பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் தாக்குதலுக்கு ஒட்டு மொத்த பாகிஸ்தானியர்களுக்கு எதிராக போர் தொடுப்பது சரியான செயலாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.