கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வீட்டு வாசலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், பெண் சாமியாருமான சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பு இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. இதை சிறப்பு விசாரணைக் குழு மறுத்துள்ளது. மேலும், கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையில் சாத்வி பிரக்யாவுக்கு தொடர்பு இல்லை. குற்றப்பத்திரிகையிலும் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதரங்கள் எதுவும் இல்லை என விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.