மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரியில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனை, கரோனா தடுப்பு பணியில் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது.
தற்போது, இம்மருத்துவமனை பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் உயிருக்கு போராடும் நபர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மருத்துவமனையில் பிரத்யேகமாக தொடங்கப்பட்ட 'பிளாஸ்மா சிகிச்சை பிரிவை' கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றுநோயினால் கடினமான சவாலை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அரசு ஊழியர்கள் அயராது உழைத்து வருகின்றனர். உலகெங்கும் பல முன்னணி ஆராய்ச்சியாளர்கள் கரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிப்பதில் மும்முரமாக உள்ளனர். ஆனால், தற்போது வரை பிளாஸ்மா சிகிச்சை மட்டும்தான் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையாக உள்ளது. உயிர்களை காப்பாற்றும் இந்த சேவையை பி.எம்.சி தொடங்குவதற்கு நான் வாழ்த்துகிறேன். கரோனா தொற்றிலிருந்தது பூரணமாக குணமடைந்தவர்கள் தானாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்து போராடும் உயிர்களை காப்பாற்ற வேண்டும்" எனக் கேட்டு கொண்டார்.
கடந்த காலங்களில் SARS, MERS, மற்றும் H1N1 (பன்றிக் காய்ச்சல்) போன்ற பிற வைரஸ் நோய்களுக்கான சிகிச்சையில் வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.