ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 48 நாட்கள் பூஜை நடத்தப்படுகிறது. இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறக்கப்பட்டது. அப்போது சபரிமலை நடையைப் பூஜைகள் செய்து மேல்சாந்தி கண்டரரு மகேஷ் மோகனரரு திறந்து வைத்து பக்தர்களுக்குப் பிரசாதங்களை வழங்கினார்.
இன்று முதல் வழக்கமான பூஜைகள்
17ஆம் தேதியான இன்று அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. புதிய மேல்சாந்தியாக சுதீர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதிரியும் பொறுப்பேற்றனர். புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடைதிறந்து வைத்து பூஜைகள் செய்தார். புதிய மேல்சாந்தியின் பொறுப்புக்காலம் ஓராண்டாகும். அதனைத் தொடர்ந்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று காலை 8 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.
மகர விளக்கு மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டதால் ஐயப்பா, ஐயப்பா என சரண கோஷங்களை எழுப்பி, பக்தர்கள் பரவசத்தை வெளிப்படுத்தினர். டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரி மலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி, சில நாட்களே ஆன நிலையில், நடைதிறக்கப்பட்டு உள்ளதால், சபரிமலையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
பிறந்த கார்த்திகை - சரண கோஷத்துடன் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்!