திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படவுள்ள சபரிமலை ரயில் திட்டத்திற்கான மொத்த செலவில், 50 விழுக்காடு செலவை ஏற்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகின்றனர். எனவே பக்தர்கள் பயணத்தை எளிதாக்கும் வகையில், எருமேலி வழியாக அங்கமலி- சபரிமலை வரை ரயில் பாதை அமைக்க கடந்த 1997ஆம் ஆண்டு சபரிமலை ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாலும், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாலும், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கான மொத்த செலவில் பாதி செலவை அரசே ஏற்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கேரள அமைச்சரவைக் கூட்டத்தில், கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு வாரியம் மூலமாக ரயில் திட்டத்திற்கான மொத்த செலவில் 50 விழுக்காடு செலவை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் அறிவிக்கப்பட்ட 1997-1998 காலக்கட்டத்தில் அதன் மதிப்பு ரூ. 517 கோடியாக இருந்தது. ஆனால், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், இத்திட்டதை தற்போது செயல்படுத்த 2 ஆயிரத்து 815 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்த சிறுத்தை: பீதியில் உறைந்த மக்கள்