ஆண்டுதோறும் விஜயதசமியன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அமைப்பின் உறுப்பினர்களிடையே உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சீன விவகாரத்தில் இந்திய அரசும் பாதுகாப்பு படையினரும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார்.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் உரையாற்றிய அவர், "கடந்த ஆண்டு பல குறிப்பிடத்தகுந்த சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த ஆண்டு தசரா விழாவிற்கு முன்பாகவே நாடாளுமன்ற வழிமுறைகளை பின்பற்றி அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு, ராமர் கோயிலின் பூமி பூஜை விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது இந்தியர்களின் பொறுமை வெளிப்பட்டதை கண்டோம். குடியுரிமை திருத்தச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக இச்சட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் நமது இஸ்லாமிய நண்பர்கள் இடையே இது குறித்த தவறான கருத்து பரப்பப்பட்டது.
போராட்டம் என்ற பெயரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வன்முறை நடந்தது. இது குறித்து விவாதிப்பதற்கு முன்பாகவே கரோனா வைரஸ் பரவ தொடங்கியது. எனது குடியுரிமைச் சட்டம் குறித்த மத துவேஷங்கள் சிலரின் மனதில் இன்னமும் உள்ளது. நமது நாட்டை ஆக்கிரமிப்பு செய்ய சீனா பல முயற்சிகள் செய்தது. இருப்பினும் அதற்கு நமது அரசும், பாதுகாப்பு படையும் தக்க பதிலடி அளித்தன. இந்திய எல்லையை சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்ததை உலகமே அறியும். சீனா தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்" என்றார்.