'மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் அடிப்படைவாதத்திற்கு எதிராகப் போராடினர். ஆனால், மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஆர்எஸ்எஸ், பாஜக தொடர்ந்து இந்தத் தலைவர்களை சொந்தம் கொண்டாடிவருகிறது' என வரலாற்றாசிரியர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில், "பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. எனவேதான் அவர்கள் மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவுக்காக பாஜக, பஜ்ரங் தல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உளவு பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. உளவு பார்த்தவர்களுக்கு எதிராக தேச துரோக வழக்கு தொடர வேண்டும்" என்றார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370-க்கு எதிரானவர் அம்பேத்கர் என பாஜக தலைவர்கள் தெரிவித்துவந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவுக்கு முற்றிலும் எதிரானவர் அவர் என வரலாற்றாசிரியர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.