நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாக்கள் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எட்டு உறுப்பினர்களை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இடைநீக்கம் செய்தார். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் விவசாய மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றபோது அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், இன்று(செப்.22) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எட்டு எம்.பி.க்களுக்கும் தேநீர் கொண்டு சென்றார். ஆனால், அவர் வழங்கிய தேநீரை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் தன்னை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட உறுப்பினர்களின் செயல்பாட்டைக் கண்டிக்கும் வகையில் 24 மணி நேரமும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலங்களவையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின்போது தான் அவமதிப்பு செய்யப்பட்டேன். இதனால், கடந்த இரு நாள்களாக மன உளைச்சல் ஏற்பட்டு, எனக்கு தூக்கம் வரவில்லை.
இது மாநிலங்களவையில் நடைபெற்ற அப்பட்டமான விதிமீறல். நாடாளுமன்ற விதி புத்தகம் கிழித்து, என் மீது வீசப்பட்டது. சில எம்.பி.க்களும் மேசையில் நின்று, எனக்கு எதிராக சொற்களை பயன்படுத்தினர்.
எனவே, இந்தச் சம்பவங்களை கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதத்தை இருக்கப்போகிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அவரது பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது' - மாநிலங்களவை துணைத்தலைவரின் செயலை பாராட்டும் மோடி