மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு காலத்தை நிதி சிக்கல் இல்லாமல் கழிக்க, மத்திய சார்பில் பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பஞ்சாப்பில் அத்தகைய முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து பஞ்சாப்பின் சமூக பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அருணா சவுத்ரி கூறுகையில், "கடந்த அகாலி அரசின் ஆட்சி காலத்தில், ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர்களை பயனாளிகளாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2017 ஜூன் மாதத்தில் நாங்கள் ஆராய்ந்த போது, 70 ஆயிரம் வழக்குகள் கண்டறியப்பட்டன, இதன் காரணமாக மாநிலத்திற்கு ரூ .162 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "30 முதல் 40 வயதான மக்களை, 60 வயதை கடந்தவர்கள் போல் காட்சிப்படுத்தி ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து மோசடி நடைபெற்றுள்ளது. அச்சமயத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 70 ஆயிரத்து 137 போலியான ஓய்வூதியதாரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.