பஸ்தி, கோண்டா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த காவல் துறையினர், ரயில்வே காவல் துறையினருடன் இணைந்து ஹமீத் அஷ்ரப் தலைமையில் இ-டிக்கெட் மோசடியில் ஈடுபட்டுவந்த அமித் குப்தா, நந்தன் குப்தா, அப்துல் ரஹ்மான் ஆகிய மூன்று நபர்களை உத்தரப் பிரதேசத்தில் உள்ள மௌ (mau) என்ற பகுதியில் நேற்று கைது செய்தனர். இந்தக் கும்பல் ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐ.ஆர்.சி.டி.சி.யை (IRCTC) ஹேக் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ரயில்வே பாதுகாப்பு அலுவலராக இருந்த ஹமீத் அஷ்ரப் 2019ஆம் ஆண்டில் கோண்டா பள்ளி குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான ஏ.என்.எம்.எஸ். (ANMS software) என்ற மென்பொருளைப் பயன்படுத்தி ஐ.ஆர்.சி.டி.சி. செயலி மற்றும் இணையதளத்தின் உள்ளே நுழைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மூன்று மடிக்கணினிகள், ஏழு லட்சம் மதிப்புள்ள ஐந்து மொபைல்கள், 261 தட்கல் டிக்கெட்டுகள், பொது டிக்கெட்டுகள், 150 போலி ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக அஷ்ரப் ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தை ஹேக் செய்துவந்ததால், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு சிபிஐ குழு பஸ்தியில் நடத்திய சோதனையில் ஹமீத் அஷ்ரப்பை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் ஒரு கும்பல் செயல்பட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது. டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தை ஹேக் செய்த பின்னர் அவர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த மென்பொருளை விற்றதாகவும் அவ்விசாரணையில் தெரியவந்தது.
இந்த மென்பொருளை உருவாக்கிய குலாம் முஸ்தஃபா என்பவரை புவனேஸ்வரில் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது இவையனைத்துக்கும் மூளையாகச் செயல்பட்ட ஹமீத் அஷ்ரப்பை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:முன்னாள் முதலமைச்சருக்கு ஏற்பட்ட கதி!