கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றை சிறப்பாகக் கையாண்டு கேரளா மாநிலம் அதனைக் கட்டுக்குள் வைத்துள்ளது. அம்மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளால், 896 பேர் மட்டுமே இதுவரை அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாகத் தனிமைப்படுத்தியது, தகுந்த இடைவெளியைச் சரியாகப் பின்பற்றியது உள்ளிட்ட காரணங்களால் கேரளாவில் நோய்த்தொற்று பெருமளவு குறைந்துள்ளது. இச்சூழலில், கடந்த சில நாள்களாக அங்கு புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவது நோக்கத்தக்கது.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இனிமேல் வெளிநாட்டிலிருந்து வரும் கேரளவாசிகள், தனிமைப்படுத்துதலுக்குப் பணம் செலுத்த வேண்டியிருக்கும். கட்டணம் வசூலிக்கும் முறை இன்றுமுதல் தொடங்க உள்ளது.
கேரளாவில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 415 பேரில், 231 பேர் கடந்த நான்கு நாள்களில் மட்டும் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 133 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் ஆவர். 178 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
மேலும், வெளிநாட்டிலிருந்து கேரளா வருவதற்கு ஏராளமானோர் பதிவுசெய்துள்ளனர். அவர்களை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். அதன்பிறகு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர். வெளிநாட்டிலிருந்து கேரளத்திற்கு வருவதற்கு பதிவுசெய்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரில் 11 ஆயிரத்து 189 கேரளம் வந்தடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முகக்கவசத்தில் இனி உங்களது முகம்: அசத்தும் டிஜிட்டல் ஸ்டுடியோ!