கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ளது பெரம்பரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அதிகளவில் பட்டியலின மாணவர்கள் படித்ததால், மாற்று சமூகத்தினர் தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் சேர்க்காமல் தவிர்த்து வந்தனர். அப்படி மாற்று சமூகத்தினர் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தாலும், பட்டியலின மாணவர்களுடன் சேர்ந்திருக்காமல் தனித்தே அமர வைத்திருந்தனர்.
மாணவர்களிடம் பிரிவினைக் காட்டக்கூடாது என்பதால், பள்ளி நிர்வாகமும் பிற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் இப்பள்ளிக்கு ‘பட்டியலின பள்ளி’ என்ற பெயரே நிரந்தரமானது. இதையடுத்து, கேரள ஆசிரியர் சங்கத்தினர் பெரம்பரா கிராமத்தைச் சேர்ந்த மற்ற சமூக மக்களைச் சந்தித்து, தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த நோக்கத்திற்கு அவர்கள் "ஆபரேசன் ரோகித் வெமுலா" என்ற பெயரும் வைத்தனர்.
மேலும் சாதிய பாகுபாடுகளைக் களைய வேண்டிய தருணத்தில் நாம் வாழ்ந்து வருவதால், அனைவரும் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் ஆசிரியர்கள் கூறியதை காதில் வாங்கவே இல்லை. அவர்களுக்கு மாற்றாக அதே கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர்.
இதனால் மகிழ்ச்சியடைந்த ஆசிரியர்கள், பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். மேலும் பள்ளியில் புதியதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு பட்டியலின மாணவர்கள் கேக் ஊட்டினர். இதைத்தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவும் சாப்பிட்டனர்.