புதுச்சேரியிலுள்ள வம்பா கீரப்பாளையத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது சுமார் பத்து நாட்டிகல் மைல் தூரத்தில் மிக கடினமான பொருள் ஒன்று மீனவர் வலையில் சிக்கியதால், மற்ற மீனவர்களுக்கும் ஸ்கூபா டைவிங் செய்பவர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், அனைவரும் இணைந்து 4 விசைப்படகுகளின் உதவியோடு கரைக்கு அப்பொருளை கொண்டு வந்து சேர்த்தனர்.
இது குறித்து மீனவர்கள் ஒதியன் சாலை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் காவல் அலுவலர்களும் அரசு அலுவலர்களும் நடத்திய விசாரணையில், கண்டெடுக்கப்பட்ட பொருள் செயற்கைக்கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் எரிபொருள் டேங்கர் என்பது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில், ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டின் உதிரிபாகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனைக் காண அப்பகுதி மக்கள் அதிகம் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்!