கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவுசெய்து அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர்த்து தலைநகரில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து ஊரடங்கு தளர்த்துவது பற்றி அரவிந்த கெஜ்ரிவால் மக்களிடன் ஆலோசனைகள் கேட்டிருந்தார். அதில், ''டெல்லியில் முழுமையான ஊரடங்கை தளர்த்துவது சரியாக இருக்காது. அதனால் ஊரடங்கு தளர்த்தப்படுவதில் உங்களின் ஆலோசனைகள் எனக்குத் தேவை. எந்தெந்த நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்? பொதுப் போக்குவரத்து வசதிகள் செயல்பட அனுமதியளிக்கலாமா?'' உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதற்கு நேற்று இரவு 8 மணி வரை முதலமைச்சரின் கோரிக்கைக்கு ஆலோசனைகள் வந்து குவிந்துள்ளன. இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மெசேஜ்கள், ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் மக்களால் அனுப்பப்பட்டுள்ளன.
இன்று இரவு 8 மணி வரை இந்த ஆலோசனைகள் வழங்க நேரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் அதிக அளவிலான ஆலோசனைகள் முதலமைச்சருக்கு அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா வைரசால் டெல்லியில் 7 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: ‘ரூ. 20 லட்சம் கோடி மதிப்பில் புதிய திட்டம்’ - பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அறிவிப்பு