கேரள மாநிலம் சந்திரா நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் ஆம்னி காரில் சென்றுகொண்டிருந்தனர். இந்த கார் தமிழ்நாடு எல்லையான வாளையாறு பகுதியைக் கடந்து கேரளாவில் உள்ள வட்டப்பாரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் ஆம்னி ஓட்டுநர், வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம், குழந்தைகள் ஆலுவா ஷூஃபியா, ஷெரின், ரியான் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆம்னி வேனில் பயணித்த மற்ற 7 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தினைக்கண்ட அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், காவல்துறையினருக்குத் தகவல் அளித்துவிட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பாலக்காடு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாளையாறு காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.