கல்வான் மோதலை தொடர்ந்து இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவரும் நிலையில், நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய மோடி, எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி அளித்தார்கள் என பெருமிதம் தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் துணிச்சலை வெளிப்படுத்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேசிய அவர், "இந்திய இறையாண்மை மீது வைக்கப்படும் மரியாதை எல்லாவற்றிற்கும் மேலானது. அதனை காக்கும் விதமாக லடாக்கில் செயல்பட்ட நம் ராணுவ வீரர்களை உலகமே பார்த்தது.
எல்லைப் பகுதிகளில் நாட்டின் இறையாண்மை மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நம் ராணுவ வீரர்கள் தக்க பதிலடி அளித்தார்கள். பாதுகாப்பு, வளர்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நம் அண்டை நாடுகளுடனான உறவு மேம்படுத்தப்பட்டுவருகிறது.
உலகின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு தெற்காசியாவில் வசிக்கின்றனர். இந்த மக்களுக்கு வளர்ச்சி, வளம் ஆகியவற்றை உருவாக்க ஒன்றிணைவது அவசியம். தெற்காசியாவில் வாழும் மக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அந்தந்த பிராந்திய தலைவர்களே பொறுப்பு.
அண்டை நாட்டவர் என்பவர் புவிசார் எல்லை பகுதிகளை மட்டும் பகிர்பவர்கள் அல்ல. நம் இதயத்தையும் பகிர வேண்டும். உறவில் நல்லிணக்கம் இருந்தால்தான் இணக்கம் ஏற்படும். நாட்டின் பாதுகாப்பை அதிகரித்து ராணுவத்தை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 110 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் - மோடி