புதுச்சேரியில் நாட்டின் 72 ஆவது குடியரசு தின விழா உப்பளம் பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கரோனா தொற்று காரணமாகப் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
குடியரசு தின விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தனர். கடும் கட்டுப்பாடுகள் காரணமாக, பொது மக்கள் அரசுத்துறை அலுவலர்கள் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்கவில்லை.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "கரோனா தொற்று ஏற்படும் காலங்களில் மக்களுக்காக மக்களின் குறை கேட்டு தீர்க்கும் பொருட்டு, அதன் கதவுகள் திறந்து இருந்தன. எப்போதும் மக்களின் குறைகளை காணொளி மூலம் கேட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இப்போதும் மக்களுக்கான சேவையை, கரோனா முன்னெச்சரிகையை கடைபிடித்து, தகுந்த நடை முறையை கடைபிடித்து அரசு தொடர்ந்து சேவை செய்து கொண்டிருக்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக உழைப்பை தந்த நிதி மேலாண்மையினால் மக்கள் பணம் வீணாகாமல், முக்கிய சேவைகள் தொய்வில்லாமல் இயங்குவதை உறுதி செய்து இருக்கிறோம். வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிலம் மற்றும் சொத்துகள் அபகரிப்புகளிலிருந்து காத்திருக்கிறோம்.
புதுச்சேரியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து, விவசாயத்திற்கும், பொது மக்களின் பாதுகாப்பான குடிநீருக்கும் உறுதி செய்திருக்கிறோம்" என்றார் கிரண்பேடி.
அதன்பின் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள் நியமனம்