முன்னாள் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியை நிறுவியவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி உயிரிழந்தார். இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஒரு சிறந்த தலைவராகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட நபராகவும் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று வரை நினைவுகூரப்படுகிறார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தார். இந்திய அரசியலில் எதிரிகள் இல்லாத தலைவராக வாஜ்பாய் கருதப்படுகிறார்.
இந்திய அரசியலில் அவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக, அவரது பிறந்த நாள் நாடு முழுவதும் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாஜ்பாய் மூன்று முறை இந்தியப் பிரதமராக பணியாற்றியுள்ளார்- முதல் முறையாக 1996ஆம் ஆண்டு 13 நாள்களும், அதன் பின்னர் 1998 முதல் 1999ஆம் ஆண்டு வரை 13 மாதங்களும் பிரதமராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1999 முதல் 2004 வரை பிரதமராகப் பணியாற்றினார்.
இந்தியாவை அதிக காலம் ஆட்சி செய்த, காங்கிரஸ் அல்லாத தலைவர்களில் வாஜ்பாய் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒரு சிறந்த அரசியல்வாதி என்பதைத் தவிர அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருந்துள்ளார்.
1950களின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையை நடத்துவதற்காக தனது சட்டப் படிப்பைவிட்டு அவர் பாதிலேயே விலகினார். அவரது தன்னலமற்ற உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
1994ஆம் ஆண்டு, அவர் இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதைப் பெற்றார். தொடர்ந்து 2015ஆம் ஆண்டில், நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவும் அவருக்கு வழங்கப்பட்டது. வாஜ்பாயின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் நீடித்தது.
தனது அரசியல் வாழ்க்கையின்போது, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுவதை அவர் உறுதி செய்தார். இதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை காக்கும் நபராகவும் அவர் இருந்தார்.
மதச்சார்பின்மை குறித்து கூறுகையில், "21ஆம் நூற்றாண்டு, மதத்தின் பெயரிலோ அல்லது அதிகார பலத்தின் மூலமாகவோ எல்லைகளை மறுவடிவமைப்பு செய்ய அனுமதிக்காது. இது நம்முள் உள்ள வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான காலம், சச்சரவுகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் காலம் அல்ல" என்றார்.
நாட்டின் பிரதமராக இருந்தபோது மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவு இருப்பதையும் அவர் உறுதி செய்தார். பெண்களுக்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கவும் சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும் முனைப்புடன் செயல்பட்டார். இவைதான் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தும் என்றும் அவர் நம்பினார்.
இதையும் படிங்க: மோடியின் சுதந்திர தின உரை: முக்கிய அம்சங்கள்