ஆசிய பிராந்தியத்தில் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றுவந்த முகேஷ் அம்பானி, தற்போது அவரது ரிலையன்ஸ் நிறுவனம் 150 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பீட்டை எட்டியதையடுத்து, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
இவர் ஆரக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர்களைப் பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கரோனா வைரஸால் உலகின் பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள் பொருளாதார சரிவை சந்தித்துவந்த வேளையில், அம்பானியின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தில் பேஸ்புக் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ததன் மூலம் அந்நிறுவனம் லாபத்தில் செழித்தது.
இதுவரை ஜியோ சம்பந்தமாக சுமார் ஆயிரத்து 500 கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் தொலை தொடர்பு சந்தைகளில் 45 விழுக்காட்டினை ரிலைன்ஸ் ஜியோ கைப்பற்றிவிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 11 லட்ச கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை அடைந்த இந்தியாவின் முதல் நிறுவனமாக ரிலைன்ஸ் நிறுவனம் உருவெடுத்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரிலைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஆறு விழுக்காடு உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ரிலைன்ஸ் நிறுவனம் 1.69 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அம்பானி அறிவித்துள்ளார்.
இதையடுத்து, முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 6.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.