நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள் விருப்பப்பட்டால் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டுவரலாம் என்று மத்திய அறிவித்ததை அடுத்து, புதுச்சேரி அமைச்சரவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று மாலை கூடி விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது முகக் கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளி காட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், ஹோட்டல்களில் தகுந்த இடைவெளி விட்டு அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத் விமான சேவை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், ஹோட்டலில் உள்ள பார் திறக்கப்படாது எனவும் தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் செல்லும் வகையில் திறக்கப்படும் என்ற முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத்தில் கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக கூறினார்.