புதுச்சேரி மாநிலம், பீமநகர் ஓடைவீதி பகுதியைச் சேர்ந்த தலைமை காவலர் சுப்பிரமணியன். இவர் கடந்த 31ஆம் தேதி புத்தாண்டு பாதுகாப்புப் பணிக்காக அரியாங்குப்பம் மாதா கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு வண்டியில் 3 இளைஞர்கள் குடிபோதையில் வந்து ஏட்டு சுப்பிரமணியத்தின் மீது மோதியதில், தலையில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த விபத்தில் சுயநினைவை இழந்த சுப்பிரமணியனுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவரது மனைவி சுமித்ரா, சகோதரர் நேரு ஆகியோர் புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து, 'பணியின்போது படுகாயமடைந்த சுப்பிரமணியத்திற்கு, இதுவரை 15 லட்சம் செலவாகிவுள்ளது. மேலும் பல லட்சம் செலவாகும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், பணியின்போது படுகாயம் அடைந்த அவருக்கு புதுவை அரசு சார்பில் எந்த உதவியும் இதுவரை செய்யவில்லை. உயர் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்க கூடவில்லை ' எனவும் வேதனைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, 'தமிழ்நாட்டில் பணியின் போது இறக்கும் மற்றும் காயம் அடையும் காவலர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. ஆனால், புதுவை அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. அதனால் அரசு உரிய இழப்பீடு வழங்காவிட்டால் வேறுவழியின்றி குடும்பத்துடன் சட்ட சபை வந்து போராட்டம் நடத்துவோம்' என வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜப்பானியர்களால் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்கள் - 2ஆம் உலகப்போரின் மிகப் பெரும் அவலம்