கரோனா ஊரடங்கின் மத்தியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மட்டும் வேலை இழந்தும், உறைவிடம், உணவின்றி, கால் நடையாகவே தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியும் பெரும் இன்னல்களை சந்தித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கவலையையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து பல பெரு வணிக நிறுவனங்களும், பொருளாதார அறிஞர்களும் இவர்களுக்கு ஆதரவுக் குரல் எழுப்பியதை அடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரச முடிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நாட்டில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கிய நாள் முதலே, அனைத்து மாநிலங்களையும் நாள்தோறும் கண்காணித்து, மாலை நான்கு மணி வரையிலான நிலவரங்களை அறிக்கையாக பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலவரங்களைக் கொண்டே மத்திய அரசு திட்டங்களையும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பல்வேறு முடிவுகளையும் எடுத்து வந்த நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான கோரிக்கைகள் அதிகரித்து வந்துள்ளன.
கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்கூட 14 நாட்கள் மட்டுமே சிகிச்சையில் இருக்கின்றனர் ஆனால், இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 28 நாட்களுக்கும் மேலாக இன்னல்களை சந்தித்து வருவதாக பல பின்னூட்டங்களும் விமர்சங்களும் வந்துள்ளன. தொடர்ந்து வந்த இவ்வாறான பின்னூட்டங்களின் அடிப்படையில், தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான வழிமுறைகளைத் தளர்த்தி அறிவிக்க, மத்திய அரசு சமீபத்தில் முடிவெடுத்தது.
எனவே கடந்த புதன்கிழமை, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணிக்க அனுமதி அளித்து அதற்கான நடைமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
அதேபோல், பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களிலுள்ள பத்ம விருது பெற்றவர்கள், விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள், வணிக அமைப்புகளின் தலைவர்கள், ஊடகத் துறையினர், பொருளாதார அறிஞர்கள் உட்பட 12 அடுக்குகளில் உள்ள நபர்களிடமிருந்து இதுகுறித்த கருத்துக்களைப் பெற அந்தந்த மாநில அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கின் மத்தியில், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இவர்களிடம் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறுமாறும், எழுத்துப்பூர்வமான முறையில் எவரிடமிருந்தும் பரிந்துரைகள் பெற வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் குறித்த விரிவான அறிக்கையை அரசிடம் இவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். முதல் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்காக பொறுப்பை, மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வழங்கினார்.
மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைத்திருத்தல், அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு, முகக்கவசங்கள், உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு அவை குறித்த பின்னூட்டங்களும் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.
முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, தற்போது மே மூன்றாம் வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்படுவோருக்கான வழிக்காட்டுதல் நெறிமுறைகள்!