மத்திய அரசு சார்பாக கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் தொடர்பான 3 மசோதாக்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதாக்கள் விவசாயிகளை அடிமையாக்கிவிடும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மசோதா என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், '' மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று மசோதாக்களும் விவசாயிகளின் நலன் சார்ந்தவை. இந்த விவசாய சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பெரும் பயனாக இருக்கும். 100 விவசாயிகளில் 85 பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சந்தைகளில் மட்டுமல்லாமல், சந்தைகளுக்கு வெளியேவும் விற்கும் நிலை இந்த மசோதாக்களால் உருவாகும். அவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் பொருள்களை விற்பனை செய்ய முடியும்.
முன்னாள் இருந்த அரசுகள் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கு புரிந்துகொள்ள முடியாத வகையில் சிக்கலான சட்டங்களை உருவாக்கியது. ஆனால் பாஜக அரசு அதனை மாற்றியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளை வங்கிகளுடன் இணைக்க அரசு சார்பாக முழுமையான முயற்சி மேர்கொள்ளப்பட்டது. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடிக்கும் மேலான நிதிகள் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுகிறார்கள். எதிர்க்கட்சியினரின் பொய் பரப்புரைக்கு எதிராக விவசாயிகளை அணுக வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!