இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 18 ஆயிரத்து 601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 592 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிற்கு முன்னதாக கரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பாகும் எண்ணிக்கை 3.4 நாள்களாக இருந்தது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் 7.5 நாள்களாக அதிகரித்ததுள்ளது. இதனால் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது.
கரோனா வைரஸ் இரட்டிப்பாகும் எண்ணிக்கை டெல்லியில் 8.5 நாள்களாகவும், கர்நாடகாவில் 9.2 நாள்களாகவும், தெலங்கானாவில் 9.4 நாள்களாகவும், ஆந்திராவில் 10.6 நாள்களாகவும், ஜம்மு - காஷ்மீரில் 11.5 நாள்களாகவும், பஞ்சாப்பில் 13.1 நாள்களாகவும், சத்தீஸ்கரில் 13.3 நாள்களாகவும், தமிழ்நாட்டில் 14 நாள்களாகவும், பிகாரில் 16.4 நாள்களாகவும் உள்ளது.
ஒடிசாவில் 39.8 நாள்களாகவும், கேரளாவில் 72.2 நாள்களாகவும் இருக்கின்றது. கோவாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோர் 14.75 சதவீதமாக உள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டு சொந்த நாடு திரும்பிய பயணி - கேரளா பெருமிதம்