கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. தெலங்கானாவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 943 ஆக உள்ளது. இதுவரை கரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 15 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் முக்கிய அலுவலர்களுடன் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக தெலங்கானா தலைமைச் செயலர் சோமேஷ் குமார், காவல் துறைத் தலைவர் மஹேந்தர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்துள்ளன.
கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கரோனா வைரஸ் பரிசோதனைகள் என அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் இன்னும் சில நாள்கள் ஆதரவளித்தால் விரைவாகக் கரோனா கட்டுப்படுத்தப்படும். வரும் நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைப் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: பணிக்குத் திரும்பிய நிறைமாத கர்ப்பிணி