தெலங்கானா மாநில தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமா ராவைச் சந்தித்த ராமோஜி குழுமத்தின் பிரதிநிதி, ரூ.5 கோடி நிதியுதவியை நேரில் வழங்கினார். முன்னதாக, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்காக, ஆந்திரா, தெலங்கானா அரசுகளுக்கு தலா 10 கோடி ரூபாய் நிதியுதவியை ராமோஜி ராவ் வழங்கியிருந்தார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தெலங்கானாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்தது. மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகளில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டிருக்கும் நிலையில், தற்போது ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர். மாநில அரசின் கோரிக்கையினை ஏற்ற ராணுவம், பண்ட்லகுடா பகுதியில் வெள்ள நிவாரணம், மீட்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளான தெலங்கானாவிற்கு தமிழ்நாடு, மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் ரூ. 5 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேற்கு வங்க துர்கா பூஜை விழா: பாஜகவின் தேர்தல் வியூகமா?