கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ராம் மாதவ் பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த புதன்கிழமை (ஜூலை 31) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் பிரதமர் மோடி உரிய நேரத்தில் முடிவு எடுப்பார் என்று கூறியிருந்தார்.
அவர் கூறியது போலவே, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் சட்டப்பிரிவு 35ஏ ஆகியவை ரத்து செய்யும் மசோதாவை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து ராம் மாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் பழைய படம் ஒன்றைப் பதிவிட்டு அதில், போராட்டம் ஒன்றில் அமர்ந்திருக்கும் மோடிக்குப் பின் உள்ள பேனரில் "சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய், தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வா, நாட்டைக் காப்பாற்று" என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த படத்தைப் பதிவிட்ட அவர் 'வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது' என்று ட்வீட் செய்துள்ளார்.