லக்னோ (உத்தரப் பிரதேசம்) : உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ராம லீலை என்ற பெயரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தியில் நடைபெறும் ராம லீலை நாடகத்தை, தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில தகவல் ஒளிபரப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப் பிரதேச அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறையுடன் இணைந்து, ராம லீலை நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலா, கலாசாரம், மத விவகார துறை அமைச்சர் நீல்காந்த் திவாரி மற்றும் பாஜக எம்.பி., பிரவேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
முதல்நாள் நிகழ்வான அயோத்தியின் சராயு நதிக்கரையில் நடக்கும் லக்ஷ்மண கீலா -விலிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பைத் தொடங்குகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு தவிர, அரசின் யூடியூப், சமூக வலைதள ஊடகங்களிலும் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலரான சஷி எஸ்.வெம்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், தூர்தர்ஷன் குழுவினர் இந்த மாபெரும் நிகழ்வை மக்களின் வீடுகளுக்கு நேரடி படமாக கொண்டு வர உள்ளனர். தூர்தர்ஷன் அணியினர் இன்று (அக்டோபர் 18) முதல் அயோத்தியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைமுறையில் உள்ள இந்த பண்டிகை காலங்களில், நவராத்திரியில் நடைபெறும் ராம லீலை நாடகத்தை நேரடி ஒளிபரப்பு செய்வதில் தூர்தர்ஷன் பெரு மகிழ்ச்சியடைகிறது. மாலை 7 மணியிலிருந்து டிடி நேஷனல் அலைவரிசையில் டிவி நேரடி மற்றும் யூடியூபில் ஸ்ட்ரீமிங் அனைத்தும் நாளை (அக்டோபர் 19) முதல் ஒளிபரப்பப்படும் என டிடியின் சிஇஓ வெம்பதி, அக். 16ஆம் தேதி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விமான நிலையத்தில் செக் இன் செய்ய ரூ.100 வசூல் - இண்டிகோ நிறுவனம்!