சீதாமர்ஹி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரையும், பிகாரின் சீதாமர்ஹியையும் இணைக்கும் வகையில், ராமர்- சீதா சாலை புதிதாக அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார். இந்தச் சாலையின் வழியாக அயோத்திக்கு ஆறு மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேரணியில் உரையாற்றிய அவர், “அயோத்தியையும், சீதாமர்ஹியையும் இணைக்கும் வகையில் புதிய சாலை ஒன்று அமைக்கப்படும்.
அதற்கு, ராமர்- சீதா சாலை மார்க்கம் என்று பெயரிடப்படும். இந்த சாலை வழியாக ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் பயணிக்கலாம். அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக, உங்களை சந்தித்து நன்றி சொல்லவே இங்கு வந்தேன்” என்றார்.
அயோத்தி நில பங்கீட்டு பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் ராமர் கோயில் கட்டும் பூமி அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான பணிகள் ஆகஸ்ட் மாதம் பூமி பூஜையுடன் தொடங்கின.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கான ஒப்புதல் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் செப்டம்பரில் பெறப்பட்டது. முன்னதாக கோயில் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோயில் வரைபடத்தை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா நிர்வாகிகள் ஆகஸ்ட் 29ஆம் தேதி அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தனர்.
பிகாரில் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி முயற்சிகள் மேற்கொண்டுவருகின்றது.
பிகார் சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் அக்.28இல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமையும் (நவ3), மூன்றாம் கட்ட தேர்தல் நவ.7ஆம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் நவ.10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்காக 1,535 காவல் நிலையங்களிலும் ஹெல்ப் டெஸ்க் தொடக்கம்!