தேர்தல் ஆணையர் பதவியிலிருந்த அசோக் லவசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அலுவலரும், முன்னாள் நிதித்துறை செயலருமான ராஜிவ் குமார் புதிய இந்திய தேர்தல் ஆணையராக இன்று (செப்.01) பொறுப்பேற்றுள்ளார். இவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் இணைந்து செயல்படவிருக்கிறார்.
பிப்ரவரி 19, 1960இல் பிறந்த ஸ்ரீ ராஜிவ் குமார், 1984இல் ஐஏஎஸ் அலுவலராக பணியாற்றினார். இந்திய அரசு சேவையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஸ்ரீ ராஜிவ் குமார், பல்வேறு அமைச்சகங்களிலும், பிகார் / ஜார்க்கண்ட் மாநில ஊழியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பி.எஸ்சி, எல்.எல்.பி., பி.ஜி.டி.எம் மற்றும் எம்.ஏ. பொதுக்கொள்கை ஆகிய கல்விப் பட்டங்களைப் பெற்ற ராஜிவ் குமார், சமூகத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காடுகள், மனிதவளம், நிதி மற்றும் வங்கித்துறை ஆகியவற்றில் விரிவான பணி அனுபவம் பெற்றவர்.
பிப்ரவரி 2020இல் இந்திய அரசின் நிதிச் செயலாளராக ஓய்வு பெற்றார். ஆனால், அதன் பின்னரும் 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொது நிறுவனத் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.