ராஜஸ்தான் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், அவரது ஆதாரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் ஆகியோர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யும் நடவடிக்கையாக, அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.
சபாநாயகரின் இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 24ஆம் தேதிவரை உறுப்பினர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 24) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசராணைக்குப் பின், சச்சின் பைலட் உள்பட 19 உறுப்பினர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை எனவும், தற்போதைய நிலையே தொடரும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், இன்றுதான் ஆளுநரை சந்திக்கவுள்ளதாகக் கூறினார். மேலும், ஆளுநர் சட்டப்பேரவையை உடனேக கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை மத்திய அரசு ஆளுநருக்கு நெருக்கடி அளித்துவருவது தனக்கு நன்றாகத் தெரியும் எனவும் கூறினார்.
விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில், சட்டப்பேரவையை கூட்டுவது சாத்தியமில்லை என பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 50 ஆயிரத்தை நெருங்கும் இந்தியா