கர்நாடக, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு தற்போது அரசியல் பனிப்போராக மூண்டுள்ளது.
மாநில முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட், தங்களை அடிமைப் போல நடத்துவதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஜெய்ப்பூர் ஃ பேர்மான்ட் நட்சத்திர விடுதியில், இன்று(ஜூலை 15) இரண்டாவது முறையாக நடந்த ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்திலும், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனையடுத்து, சச்சின் பைலட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அந்தக் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதிப்தி மனநிலையில் இருக்கும் சச்சின் பைலட்டுடன் அவரது ஆதரவாளர்களான விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகிய இரு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலிடம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப. சிதம்பரம், அகமது பட்டேல் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டத் தலைவர்களின் முறையீடுகளை நிராகரித்ததை அடுத்து, பைலட் கட்சியின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத் தலைவராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு அணியின் தலைவரும், கல்வி அமைச்சருமான கோவிந்த் சிங் டோட்டாசரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக பதவியிலிருந்து சச்சின் பைலட்டின் ஆதரவாளரான முகேஷ் பாக்கர் நீக்கப்பட்டு, அசோக் கெலாட்டின் ஆதரவாளரான கணேஷ் கோக்ரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல சேவா காங்கிரஸ் அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்த எம்.எல்.ஏ ராகேஷ் பரீக்கிற்குப் பதிலாக ஹேம் சிங் சேகாவத் என்பவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக, சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதை கண்டித்து, இந்திய தேசிய மாணவர் ஒன்றியத்தின் (என்.எஸ்.யு.ஐ) மாநில பிரிவின் தலைவர் பதவியிருந்து அபிமன்யு பூனியா தாமாகவே பதவி விலகியுள்ளார்.
ராஜஸ்தானில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலை குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, " பைலட்டையும் அவருக்கு நெருக்கமான இரு அமைச்சர்களையும், தங்கள் பதவிகளில் இருந்து நீக்குவதாகக் கட்சி முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆசியைப் பெற்ற பைலட், அதன் காரணமாகவே இளம் வயதிலேயே அரசியல் அதிகாரங்களை அனுபவித்தார். ஆயினும்கூட, அவரும் பிற அமைச்சர்களும் பாஜக சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றுள்ளனர்.
இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, காங்கிரஸ் கட்சி வேறு வாய்ப்பில்லாமல், கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளது" என தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சச்சின் பைலட், "சத்தியத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. ராகுல் காந்தி கட்சி தலைமைப் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகியதையடுத்து கெலாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எனக்கு எதிராக செயல்படத் தொடங்கினர்.
ராஜஸ்தான் வளர்ச்சிக்காக நான் பணியாற்றுவதை கெலாட் அனுமதிக்கவில்லை. அலுவலர்களிடம் சொல்லி என் பேச்சைக் கேட்க வேண்டாம் என்றும் என்னுடைய துறைசார்ந்த கோப்புகளை ஆதரிக்க வேண்டாம் என்றும் வெளிப்படையாகவே சொல்லப்பட்டது.
மக்களுக்காக நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை எனில் எதற்காக பதவியில் இருக்க வேண்டும். பாஜகவின் கரங்களில் நான் வீழ்ந்து விட்டேன் என்பது தவறு, பாஜகவை தோற்கடிக்கத்தான் அயராது பணியாற்றினேன், அப்படியிருக்கும் போது நான் ஏன் என் கட்சிக்கு எதிராகவே செயல்படப்போகிறேன்?
நான் பாஜகவில் சேரப்போகிறேன் என்பவர்கள் என் பெயரைக் கெடுக்க விரும்புகிறார்கள். என் பதவிகளைப் பறித்ததாலும் நான் காங்கிரஸ் கட்சிக்காரன் தான். கெலாட் தனது முன்னாள் கட்சியான பாஜகவின் கைகளில் விழுந்துவிட்டார்.
கட்சிக்குள் குதிரை பேரம் நடந்து கொண்டிருப்பதை நான் கண்டுகொண்டிருக்கிறேன். பாஜக மத்தியப் பிரதேசத்தில் செய்ததை மீண்டும் செய்ய விரும்புகிறது" என்றார்.
200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரசில் 107 இடமும், பாஜக 72 இடமும் உள்ளது. 13 சுயேட்சைகள் , சிபிஎம் மற்றும் பாரதியா பழங்குடியினர் கட்சி (பிடிபி) தலா இரண்டு உறுப்பினர்களும் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) ஒரு உறுப்பினரும் கொண்டுள்ளது.
இதில், சிபிஎம் மற்றும் பிடிபி கட்சிகள் காங்கிரஸ் தனது உட்கட்சி மோதலைத் தீர்க்கும்வரை தங்களது எம்.எல்.ஏ.க்கள் நடுநிலை வகிப்பர் என்று அறிவித்துள்ளது. தற்போது வரை சச்சின் பைலட்டுக்கு 15 முதல் 17 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.