ராஜஸ்தானில் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட மாநிலத்தின் ஆளுநருக்கு ஆளும் காங்கிரஸ் அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் அந்தக் கோரிக்கையை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஏற்க மறுத்தார்.
இதனை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், எஜமானர்களின் (மத்திய அரசு) பேச்சை கேட்டு ஆளுநர் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டுவருகிறார் எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "நீதி வரம்புக்கு வராத முட்டாள் தனமான தடங்கல் விளைவிக்கும் செயல்கள் மாநிலத்தின் பரிதாபமான குழப்பமான நிலையை பிரதிப்பலிக்கிறது.
சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உள்நோக்கம் கொண்ட, திசைதிருப்பும் கேள்விகள் மத்திய அரசின் தலைமையிடமிருந்து வருகிறது. கூண்டுக்குள் இருக்கும் கிளி எஜமானரை மதித்து செயல்படுவது போல் ஆளுநர் செயல்படுகிறார்.
அரசியலமைப்புக்கு உட்பட்ட ஆளுநர் பதவியின் கண்ணியத்தை இது கெடுக்கும் விதமாக உள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையில், மத்திய அரசும் ராஜஸ்தானில் உள்ள எதிர்க்கட்சியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகிறது. அவர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் காலதாமதப்படுத்தும் அல்லது நடத்த மறுக்கும் ஆளுநரின் செயல் நீதிக்குட்பட்டதா?” என்றார்.
ராஜஸ்தான் துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் ஆகியோர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத காரணத்தால், அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்ய கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சபாநாயகரின் அதிகாரத்தை அரசியல் சாசன அமர்வு உறுதிப்படுத்தும் வரை அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிரான நடவடிக்கை செல்லாது என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.