கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானிலும் தற்போது அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தனது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
இந்நிலையில், ராஸ்தான் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம் ஃபேர்மாண்ட் ரிசார்ட்டில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராஜஸ்தானின் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கலந்துகொள்ளவில்லை. 104 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ள இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் மூத்தத் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா உறுதிசெய்துள்ளார்.
கட்சிக்கு எதிராக ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'பாசிச கட்டுப்பாட்டில் இந்திய ஊடகங்கள்' - ராகுல் காந்தி தாக்கு!