ராஜஸ்தானில் இருக்கும் சுமார் 20 லட்சம் குஜ்ஜார் இன மக்கள் மேய்ச்சல் மற்றும் விவசாயத் தொழிலை பெரும்பான்மையாக செய்து வருகின்றனர். இந்நிலையில் குஜ்ஜார் இனமக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தங்களது இன மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இடஒதுக்கீடு வழங்கக்கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாநில அரசுடன் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் போராடயிருப்பதாக குஜ்ஜார் இன மக்கள் அறிவித்தனர்.
அதன்தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் இன்று ( நவ.02) நிகழ்ந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்.
இது குறித்து குஜ்ஜார் இன மக்களின் தலைவர் கிரோரி சிங் பெயின்ஸ்லா கூறுகையில், 'எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை, போராட்டம் தொடரும். எனவே, மத்திய, மாநில அரசுகள் எங்களது கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்ற வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக குஜ்ஜார் இன மக்கள் பரத்பூரில் ரயில் வழித்தடத்தை மறித்து நடத்திய போராட்டத்தால் 7 ரயில்கள் வழித்தடம் மாற்றி திருப்பி விடப்பட்டன.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் குடிபெயர்ந்த குஜ்ஜார் இனமக்கள்: ரயில்சேவை கடும் பாதிப்பு