கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் உயிரிழந்தவர்களின் அஸ்தியை, நதியில் கரைக்க முடியாத வேதனையில் மக்கள் இருப்பதை உணர்ந்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், அஸ்தியை குடும்பத்தினர் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் சென்று கரைப்பதற்கு சிறப்புப் பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஊரடங்கில் முக்கிய குடும்ப உறுப்பினர்களின் இழப்பினால் தூக்கத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், அவர்களின் அஸ்தியைக் கூட கரைக்க முடியாமல் போனது மிகவும் வேதனையானது. இதை மனதில் கொண்டு உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறிப்பிட்ட மாநில அரசுடன், உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் எந்தவிதமான அலட்சியமும் இருக்கக்கூடாது. கரோனா தனிமை மையத்தில் உள்ளவர்களுக்கு உணவு, நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் வீணு குப்தா கூறுகையில், "மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது 7 லட்சத்து 18 ஆயிரம் மக்கள் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். பலர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: குண்டு வச்சிடுவோம்... முதலமைச்சருக்கு வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல்!