கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பூங்காக்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜிவ் ஸ்வரூப் பேசுகையில், ''கரோனா வைரஸ் அதிகமாகப் பாதித்துள்ள சிவப்பு மண்டலங்களிலும் ஆட்டோக்கள், கால் டாக்சிகள், ஆட்டோ - ரிக்ஷாக்கள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. கால் டாக்சிகள் மூன்று பேர் மட்டுமே செல்லவும், ஆட்டோக்களில் இருவர் மட்டுமே செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல் பூங்காக்கள் காலை 7 மணி முதல் மாலை 6.45 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுஇடங்களில் அதனை யாரும் பயன்படுத்தக் கூடாது.
அதேபோல் உணவகங்கள், ஜூஸ் கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட சிறு, குறு வியாபாரக் கடைகள் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளன. இதனைக் காரணமாக வைத்து பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடக் கூடாது.
சமூக இடைவெளியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் இருந்தால், மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை 7 ஆயிரத்து 28 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய பாஜக எம்பி