குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் எட்டு எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்கு காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததற்கு பாஜகவின் குதிரை பேரமே காரணம் என காங்கிரஸ் கட்சியினர் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதேபோல் ராஜஸ்தானிலும் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதி அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்எல்ஏக்களை ஜெய்ப்பூரிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து மாநிலங்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் சில எம்எல்ஏக்கள் உடல் நலனைக் கருத்தில் கொண்டு வீட்டிற்குத் திரும்பியதாகவும், அவர்கள் மீண்டும் நாளை விடுதிக்கு அழைத்து வரப்படுவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள கே.சி.வேணுகோபால், நீரஜ் தாங்கி ஆகியோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்கவுள்ளனர்.
காங்கிரஸிடம் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தும், பாஜகவினர் எம்எல்ஏக்களை தன்வசம் இழுப்பதற்காக ஏதேனும் முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து காங்கிரஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.