ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் 2017ஆம் ஆண்டு பெஹ்லு கான் என்பவர் பசு கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்பட்டார். அவர் கொலைசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட்டிறைச்சி தடைச்சட்டம் 5, 8, 9 ஆகிய பிரிவுகளின் கீழ், அவர் மீதும் அவரது மகன்கள் இஸ்ரத், அரிஃப் ஆகியோர் மீதும் பசு கடத்தியதாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்த விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு பேரையும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து இந்த வழக்கை ராஜஸ்தான் அரசு விசாரித்துவந்தது. அப்போது, முதற்கட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், பசு கடத்தியதாக பெஹ்லு கானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், "குற்றவாளிகளைத் தப்பிக்கவைப்பதற்காகவே பெஹ்லு கானுக்கு எதிராக பசு கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கும்பல் வன்முறை சம்பவங்களை தேச விரோதிகள் செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், அம்மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் விசாரணை நடைபெற்றது. பெஹ்லு கான் வழக்கில் நீதி நிலைநாட்டப்படும். அவர் உலகத்தில் இல்லை என்றாலும், கும்பல் வன்முறையின் அடையாளமாக கான் மாறிவிட்டார். நாட்டில் எப்போதெல்லாம் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நீதித் துறை, நிர்வாகம், காவல் துறை ஆகியவையால் பெஹ்லுகான் நினைவுகூரப்படுவார்" என்றார்.
இதையும் படிங்க: டிஜிட்டல் தலாக்: வாட்ஸ்அப் மூலம் மனைவிக்கு முத்தலாக்!