டெல்லியில் மார்ச் மாதம் தொடங்கி ஜூன், ஜூலை மாதங்கள் வரை வெயில் வாட்டி வதைக்கும். இதன் காரணமாக கடும் உஷ்ணம் நிலவும். அனல் காற்று வீசும்.
இதே வானிலை கடந்த சில மாதங்களாக டெல்லியில் காணப்படுகிறது. அதுவும் கடந்த இரு நாள்களாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்தது.
இதனிடையே வீசிய அனல் காற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை (ஜூன்22) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்தக் கணிப்பை மெய்ப்பிக்கும் வகையில், இன்று (திங்கள்கிழமை) அதிகாலை முதலே டெல்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்துவருகிறது. இதனால் 40 டிகிரி செல்சியஸ் வெயிலை அனுபவித்த மக்கள் சற்று குளிர்ச்சியை காண்கின்றனர்.
இது குறித்து வானிலை நிபுணர்கள் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் புயல் மையம் கொண்டுள்ளதால், டெல்லியில் முன்கூட்டியே பருவமழை தொடங்கியுள்ளது” என்றனர். ஹரியானாவில் பருவமழை 25ஆம் தேதி தொடங்குகிறது.