கோவிட்-19 பாதிப்பு காரணமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்படிருந்த ரயில் சேவைகள், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து படிப்படியாக இயக்கப்பட்டுவருகிறது.
இருப்பினும், வழக்கமாக இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டு, தற்போது சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டுவருகிறது. மேலும், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து ரயில்கள் இயக்கப்படுவதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளுக்கு மட்டுமே ரயில்களில் அனுமதியளிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பயணிகள் பலரும் ரயில்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், நவராத்திரி, துர்கா பூஜா, தீபாவளி என அடுத்து வரும் நாள்கள் பண்டிகை நாள்களாக உள்ளதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே அதிகரித்தது.
இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய ரயில்வே 196 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் இன்று (அக். 20) முதல் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் ரயில்களைக் காட்டிலும் 10 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக இந்தச் சிறப்பு ரயில்களின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு 1.35 லட்சம் கோடி ரூபாய் கடன் - மத்திய நிதியமைச்சகம்