கரோனா பாதிப்பு காலத்திலும், மத்திய அரசு சிறப்பு ஷ்ராமிக் ரயில் மூலம் கட்டணம் வசூலித்து லாபம் பார்ப்பதாக காாங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தியன் ரயில்வே சில தகவல்களைத் தெரிவித்துள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இந்தியன் ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியது.
இதற்காக இந்திய ரயில்வே இரண்டாயிரத்து 142 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களிலிருந்து இந்தத் திட்டத்தின் வாயிலாக வெறும் 429 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாகக் கிடைத்துள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான குடிபெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர். குஜராத் மாநிலத்திற்கு 15 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அனுப்ப ஆயிரத்து 27 ரயில்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து, குஜராத் அரசு ரயில்வேக்கு அதிகபட்சமாக 102 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது.
844 ரயில்களில் பயணம் செய்த 12 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகாராஷ்டிரா அரசு 85 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. 271 ரயில்களில் 4 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு 34 கோடி ரூபாயை ரயில்வேக்கு செலுத்தியது.
உத்தரப் பிரதேச அரசு 21 கோடி ரூபாயும், பிகார் அரசு 8 கோடி ரூபாயும், மேற்கு வங்க அரசு 85 லட்ச ரூபாயும் ரயில்வேக்கு செலுத்தியுள்ளன.
மாநில அரசுகள் மூலம் ரயில்வேக்கு கிடைத்த 429 கோடி ரூபாய் வருவாய், செலவழித்ததில் 15 விழுக்காடு மட்டுமே என ரயில்வே செய்தித் தொடர்பாளர் டி.ஜே. நாரெய்ன் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஒரு குடிபெயர்ந்த தொழிலாளியின் பயணத்திற்காக இந்தியன் ரயில்வே சராசரியாக மூன்றாயிரத்து 400 ரூபாய் செலவழிப்பதாக ரயில்வே வாரியத்தின் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
ஷ்ராமிக் ரயில்களின் மூலம் இதுவரை சுமார் 63 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு ரயில்களுக்கான மாநிலங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் ரயில்வே துறை பூர்த்தி செய்துள்ளது. கடைசியாக ஜூலை 9ஆம் தேதி இயக்கப்பட்டது வரை மொத்தம் நான்காயிரத்து 615 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.