நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மே மாதம் முதல் ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.
கரோனா ஊரடங்கிற்கு முன்பு வரை ஒவ்வொரு ரயிலுக்கும் இரண்டு முறை முன்பதிவு அட்டவணை தயார் செய்யப்படும். முதல் முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு தயார் செய்யப்படும். அதைத் தொடர்ந்து இரண்டாவது முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பு முதல் ஐந்து நிமிடம் முன்பு வரை தயார் செய்யப்படும்.
முதல் முன்பதிவு அட்டவணைக்குப் பிறகு ஆர்.ஏ.சி.க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைகள், ரத்து செய்யப்பட்ட இருக்கைகள் ஆகியவை காலி இருக்கைகள் என்று அறிவிக்கப்படும். அதன்பின் அவற்றை பொதுமக்களால் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பின் அவற்றையும் இணைத்து இரண்டாவது முன்பதிவு அட்டவணை தயார் செய்யப்படும்.
ஆனால் கரோனா பரவல் காரணமாக இரண்டாவது முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரே தயார் செய்யப்படும் என்று மே 11ஆம் தேதி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், கரோனா பரலுக்கு முன்பு இருந்ததைப் போலவே இரண்டாவது முன்பதிவு அட்டவணை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் முன்பு வரை தயார் செய்யப்படும் என்று ரயில்வே துறை தற்போது அறிவித்துள்ளது.
கரோனா காரணமாக வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் மார்ச் இறுதி வாரம் முதல் ரத்து செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. தற்போது ரயில் சேவை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.